75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தனது ஆட்டோவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.அதுவோ ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்று அடம்பிடித்தது. இதுதான் தருணமென அருகில் சென்ற நான்,
“ஏன் அங்கிள் கேசுக்கு மாறினால் ரொம்ப ஈஸியா ஸ்டார்ட் ஆகிடுமே” என்றேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவரின் கண்களில் தெரிந்தது எனது கருத்தின் சாத்தியமின்மையும் அவரது இயலாமையும். “அதை ஏம்மா கேக்கிற, கேசுக்கு மாறனுமின்னா 18,000 ரூபா வேணும். சாவரியே ஆகமாட்டேங்குது. அதோட மீற்றர் வேற போடனுங்கிறாங்க. இந்த லட்சணத்தில பணத்துக்கு எங்க போறது?” என்றார் கோவிந்து என்கிற கோவிந்த சாமி.
கேசுக்கு மாறும் விடயத்தில் இதுதான் அனைத்து ஆட்டோ சாரதிகளினதும் கருத்து. அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் எல்லா ஆட்டோக்களையும் கேஸ் ஆட்டோக்களாக மாற்றவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையிலுள்ள 45,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் கேஸ் கருவி பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சென்னை நகரில் கேஸ் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெற்றோல், டீசலால் ஏற்படும் சூழல் மாசடைவும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும். ஆனால், ஆட்டோ சாரதிகள் கூறும் கருத்துக்களைப் பார்த்தால் இது எட்டாக்கனியாகிவிடும் போல் தோன்றுகின்றது.
“25,000 ரூபா மானியத்தோட 5,000 கேஸ் ஆட்டோ கொடுக்கப் போறாங்களாம். அதுக்கு தகுதி தராதரம் எல்லாம் பாக்குறாங்க. 2,000 ரூபா முதல்ல மானியமாக் கொடுக்கிறேன்னாங்க. இன்னும் அதக்கூடக் கொடுக்கல்ல. இப்பிடி ஒண்ணுமே பண்ணாம கேசுக்கு மாறுன்னா நாங்க என்னங்க பண்ணுறது?” என்று கோபப்பட்டார் மற்றொரு சாரதியான நல்ல கண்ணு. இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “25,000 ரூபா மானியத்துடன் 5,000 கேஸ் ஆட்டோக்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென அரசு சில தகுதிகளை வரையறுத்துள்ளது. இந்த தகுதி படைத்த ஆட்டோ சாரதிகளுக்கு மட்டுமே மானியத்துடன் கேஸ் ஆட்டோ வழங்கப்படும். அதன்படி 1,500 பேர் மட்டுமே மானியத்துடன் கேஸ் ஆட்டோக்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் மானியத்துடன் கேஸ் ஆட்டோக்களைப் பெறத் தகுதி படைத்தவர்களையும் சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும். ஆட்டோக்களில் கேஸ் கருவி பொருத்த 2,000 ரூபா மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை 5,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறைதான் மானியம் வழங்குகின்றது. இதை உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.” என்றிருக்கிறார். நல்ல கண்ணு கோபப்பட்டது நியாயம் போலத்தான் தோன்றுகின்றது. 1,500 ஆட்டோ சாரதிகள்தான் இருக்கிறார்களா இவ்வளவு பெரிய சென்னை மாநகரில்? அத்துடன் கேஸ் கருவி பொருத்த 18,000 ரூபா தேவைப்படுகின்ற போது 2,000 ரூபா எந்த மூலைக்கு?
இன்னுமொரு பாரிய சிக்கலை முன்வைக்கிறார் ஆட்டோ சாரதி கங்காதரன். “என்னோடது 2 ஸ்ரோட்க் வண்டி. கேசுக்கு மாறனுன்னா 4 ஸ்ரோட்க் வண்டிதான் தேவை. அதுக்கு இரண்டரை லட்சம் ரூபா செலவாகும். ~~5,000 ரூபாவே கொடுக்க மாட்டேங்கிறாங்க. இரண்டரை லட்சமா கொடுக்கப் போறாங்க?” என்கிறார் இவர். உண்மைதான். இன்று சென்னையில் உள்ள பல ஆட்டோக்கள் 2 ஸ்ரோட்க் வண்டிகளாகத்தான் இருக்கின்றன. அப்படியென்றால் இந்த ஆட்டோ சாரதிகளின் நிலை?
இது இவ்வாறிருக்க ஆட்டோக்கள் அனைத்தும் கேசுக்கு மாறுகின்றன என்றே வைத்துக் கொள்கிறோம். சென்னையில் இருப்பதோ 22 கேஸ் நிரப்பு நிலையங்கள் மட்டும்தான். நகரிலேயே இந்த எண்ணிக்கை என்றால் புறநகர்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. கேஸ் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கேஸ் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோக்கள் கேஸ் நிரப்பு நிலையங்களைத் தேடுவதிலும் கிய+வில் நிற்பதிலுமே இருக்கின்ற கேஸ் தீர்ந்துவிடும். ஆனால், நெரிசல் மிகுந்த சென்னை நகரில் கேஸ் நிரப்பு நிலையங்களை அமைப்பது கடினம் என்று இந்தியன் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் தற்போது சென்னை நகரில் ஆட்டோக்களுக்கு கேஸ் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றது. கேஸ் நிரப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றால் அதனைச் சுற்றி 50 மீற்றர் தூரத்தில் பள்ளி உள்ளிட்டவை இருக்கக்கூடாது. மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கேஸ் நிரப்பு நிலையங்களை அமைக்க முடியாது. மேலும் வெடிமருந்துத் துறை உள்ளிட்ட துறைகளிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும் என்று ஐ.ஓ.சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, கேஸ் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
கேஸ் ஆட்டோ வாங்குவதற்கு வங்கிகள் கடன் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படித் தருவதாக இருந்தாலும் அதற்கான வரன்முறைகள் நெடுஞ்சாலைபோன்று நீண்டுகொண்டே செல்லும். ஆட்டோக்கள் அனைத்தும் கேசுக்கு மாறவேண்டுமானால் அரச மானியத்தை உயர்த்த வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல் அதனை உரியவர்களுக் வழங்க வேண்டும். கேஸ் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். இந்த அனைத்து வேண்டுங்களும் நிறைவேற்றப்பட்டால்தான் ஏழை சாரதிகளின் வயிற்றில் அடிக்காமல் இலகுவான முறையில் அரசு தான் நினைத்ததைச் சாதிக்க முடியும். இவ்வாறில்லாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்ச்சொல்லில் கூறுவதில் எந்த வித அர்த்தமும் இல்லை என்கின்றனர் சென்னைப் போக்குவரத்தின் நடுநாயகர்களான ஆட்டோ சாரதிகள்.



premtheva சொன்னது,
செப்டம்பர் 14, 2007 இல் 12:05 பிற்பகல்
Its nice and beautiful