றோஜா முத்தையா நூலகம்

“றோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்”
நூலகம் என்பதை விட காலத்தால் அழிவடையாத பொக்கிஷம் என்றால் பொருத்தமாக இருக்கும்.
தரமணியில் அமைந்துள்ள இக்கட்டடத்தினுள் நுழைந்தால் அவ்வாறு தான் எண்ணத் தோன்றும்.

img_0055.jpg

கோட்டையூரைச் சேர்ந்த அமரர் றோஜா முத்தையா அவர்கள் 1950 லிருந்து தனது வாழ்நாள் முழுவதும் சேகரித்த 1,00,000 அச்சு ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த  ஆராய்ச்சி நூலகம். இவரது தொகுப்புக்களைப் பற்றி கேள்விப்பட்ட சிகாகோ பல்கலைக் கழகம் ஆய்வாளர்களுக்குச் சேவை செய்வதற்காக அவற்றை வாங்கியது. எனினும் இத்தொகுப்பு தென்னிந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருந்ததால் தமிழ்நாட்டிலேயே ஒரு கருவூலமாக றோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது சிகாகோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து றோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை இந்நூலகத்தை நடத்தி வருகிறது.

கடந்த 12 வருடங்களில் 60,000 ஆவணங்கள் மேலும் சேகரிக்கப்பட்டுள்ளன.
களிமண் பதிவுகள் முதல் கணணிப் பதிவுகள் வரை அனைத்தும் அசலாக, நகல்களாக, நுண்படச்சுருள்களாக இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பல மூலங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றி இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கான இடமாகவும் ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு ஆய்வுக்கான நூலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அத்தாட்சியாகவும் றோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் விளங்குகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கான முக்கியத்துவம் இன்னமும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் விந்தை. “கடந்த 13 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்திலேயே இந்நூலகம் இயங்கி வருகின்றது. குறிப்பிட்ட சில இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு மட்டுமே மானியம் கிடைக்கப்பெற்றுள்ளது. வருடாந்த செலவுத் தொகையான 38 லட்சம் உட்பட அனைத்துச் செலவுகளும் நூலக அறக்கட்டளையினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.அரசாங்கமோ அல்லது ஏனைய அமைப்புக்களோ எந்தவித உதவிகளையும் வழங்க முன்வரவில்லை” என்றார் நூலகத்தின் இயக்குநர் திரு.க.சுந்தர்.

இதேவேளை கிடைத்தற்கரிய இந்தக் கருவூலத்தைப் பயன்படுத்த வருபவர்களின் எண்ணிக்கை மாதமொன்றிற்கு 60-1000 மட்டுமே தான். மக்களது அறிவு விருத்திக்காகவே இந்தப் பணியினைச் செய்கின்றோம். எனவே சிறந்த முறையில் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா. ஊடகங்கள் தான் இதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் திரு.க.சுந்தர் விடுத்தார்.

ஒரு சமுகத்தின் அறிவுச் செயற்பாட்டில் முக்கிய பங்கினை வகித்து வருபவை நூலகங்களாகும். குறித்த ஒரு நாட்டில் நூலகத்துறை சிறப்பாக வளர்ச்சியடையவில்லை என்றால் அந்த நாட்டின் அறிவுத்துறை சிறப்பாக இல்லை என்றே கொள்ள வேண்டும். இந்த நிலையில் தனிநபர் முயற்சியில் வளர்ந்து வரும் இந்த நூலகத்திற்கென கட்டடம் மற்றும் நிதியினை வழங்கி அனைவருக்கும் இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த விடயம் தொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.